Saturday, August 13, 2016

நல்லூர் கந்தன் ஆலயம்

     
நல்லூர் கந்தன் ஆலயம் தோன்றிய இடம் தோற்றக் கால அமைப்பு போன்றன இன்று மாறியிருந்தாலும் ஈழத்தமிழரால் மிக உயர்ந்த நிலையில் போற்றப்படுவதற்கு அது கி.பி. 19ஆம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட 450 ஆண்டு கால யாழ்ப்பாண இராச்சியத்தின் அரசு ஆலயமாகத் திகழ்ந்ததே முக்கிய காணமாகும்.

             அந்த வகையில் அவ்வாலயம் எவ்வாறு ஈழத்தமிழர் வரலாற்றோடும் வாழ்வோடும் ஒன்றினைந்து வளர்ந்ததென்றால் யாழ்ப்பாண அரசு தொடர்பாக தோன்றிய பிற்கால தமிழ் இலக்கியங்கள் யாழ்ப்பாண அரசு காலத்தில் இருந்த ஆலயங்கள் பலவற்றைக் குறிப்பிட்டாலும்  அவற்றின் மையக்கோயிலாக நல்லூர் கந்தசுவாமி கோவிலையே குறிப்பிடுகின்றார்.  

                     இதற்கு முக்கிய காரணம் இக்கோவில் யாழ்ப்பாண ஆட்சியாளரின் அரண்மனையாகவும், அதிகார பீடமாகவும் அரச பாதுகாப்பு அரணாகவும் அரச செயலகத்தின் குறியீடாகவும் அக் காலப் பாண்டியன் மையமாகவும் திகழ்ந்தமையேயாகும். அப்பாரம்பரிய வரலாற்று நம்பிக்கையின் விளைவு தான் இன்றும் ஏனைய ஆலயங்கள் பலவற்றிற்கும் இல்லாத பெருமையும் சிறப்பும் இக்கோவிலுக்கு இருப்பதற்குக் காரணமாகும். இருப்பினும் இக்கோயில் எப்போது? யாரால்? எந்த இடத்தில் கட்டப்பட்டது என்ற கேள்விக்கு இன்று வரை உறுதியான விடை காணமுடியவில்லை.

         இக்கோயில் பற்றிய சில சான்றுகளை நோக்கம் போது இக்கோயில் 13ம் நூற்றாண்டிலேயே கட்டப்பட்டிருக்க வேண்டும் என்பது தெரிகின்றது. ஆனால் அதற்கு முன்னரே சிறு கோயிலாக அல்லது  முருக வழிபாட்டுக்குரிய இடமாக இருந்திருக்க வேண்டும் என்பது தெரிகின்றது. ஆனால் இதற்கு முன்னரே சிறு கோயிலாக இல்லது முருக வழிபாட்டுக்குரிய இடமாக இருந்திருக்கக்கூடும்.

 தென்னிந்திய சோழப் பெருமன்னனாகிய 1ம் இராஜேந்திர சோழனின் கல்வெட்டொன்று நல்லூரில் இந்து கோவிலுக்குக் கொடுத்த தானம் பற்றிக் குறிப்பிடப்படுகின்றது.  இக் கல்வெட்டானது போர்த்துக்கேயரால் நிறுவப்பட்ட யாழ்ப்பாணக் கோட்டையில் இருந்து பெறப்பட்டதாகும். போர்த்துக்கேயரால் நல்லூரில் இந்து கோயிலை அழித்து தரைமட்டமாக்கிய அங்கிருந்து பெற்ற கற்சிதைவுகளை கோட்டை கட்டுவதற்காக கொண்டு சென்றமை குறிப்பிடத்தக்கது.

            மேலும் பழைமையான வழிபாட்டு முறையான பலியிடும் வழக்கம் அண்மை நூற்றாண்டு வரையிலும் அக்கோயிலில் இருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆறுமுகநாவலர் நல்லூர்க்கந்தசுவாமி கோயிலைக் கட்டியவர் புவனேகபாகு எனக் குறிப்பிடுகின்றார். கைலாயமாலையில் இடம் பெற்ற குறிப்பினைக் கொண்டு இக்கோயில் நிறுவப்பட்ட காலம் கி.பி 10ஆம் நூற்றாண்டு எனவும் சிலர் 13ஆம் நூற்றாண்டு எனவும் எடுத்துக் காட்டுகின்றனர். ஆயினும் நம்பகரமான  சான்றுகளைக் கொண்டு பார்க்கும் போது தமிழில் செம்பகப் பெருமாள் என்றும்  சிங்களநூல்களில் சப்புமல் குமாரய என்றும் அழைக்கப்பட்ட புவனேகபாகு என்பவனே இக்கோயிலைக் கட்டினார் எனவும் பெரும்பாலான  அறிஞர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்.

            இன்று நகரின் மையத்தில் மிக உயர்ந்த நிலையில் பலரையும் கவர்ந்திழுக்கும் வண்ணம் காட்சியளிக்கும் கந்தன் ஆலயம் பலர் நினைப்பது போல் பிற்காலத்தில் தோன்றி குறுகிய காலத்தில் தோன்றிய ஆலயமல்ல அது தமிழரின் அரசியல் போராட்ட வரலாற்றுடன் இணைந்து பல படையெடுப்புக்களை, போராட்டங்களை, அழிவுகளைச் சந்தித்து படிப்படியாக வளர்ந்த ஒரு ஆலயம் அதனால் தான் இவ்வாலயம்  எம்மதத்தின் அடையாளமாக மட்டும் பார்க்கப்படாது  எமது இனத்தின் அரச சின்னமாக பாரம்பரிய பண்பாட்டின் அடையாளமாகக் பார்க்கப்பட வேண்டும்.


No comments:

Post a Comment