நெடுந்தீவு மத்தியில் தற்போதைய வைத்தியசாலைக்கு கிழக்கே பயன்படுத்த முடியாத நிலையில் மிகப்பழைமை வாய்ந்த கட்டிடத் தொகுதிகள் சிதைவுண்டு காணப்படுகின்றன.
யாழ்ப்பாணத்திலும் ஊர்காவற்துறையிலும் உள்ள கோட்டைகளை அடுத்து ஒல்லாந்தர் காலத்திற்குரிய இன்னொரு முக்கிய நினைவுச்சின்னமாக இக் கட்டிடத் தொகுதியைக் குறிப்பிடலாம்.
இக் கட்டிடத் தொகுதிகளை அங்குள்ள மக்களில் ஒரு பிரிவினர் வெடியரசன் கோட்டை எனவும் இன்னொரு சாரார் ஒல்லாந்தர் கோட்டை எனவும் அழைத்து வருகின்றனர். ஆனால் ஒல்லாந்தர் கால ஆவணங்களில் நெடுந்தீவில் ஒரு கோட்டை கட்டப்பட்டதற்கான எந்த குறிப்பும் இருப்பதற்காக தெரியவில்லை.
கடற்கரையை அண்டிக் காணப்படும் இக் கட்டிடத் தொகுதியின் அமைப்பையும் ஒல்லாந்தர் காலக் கலைமரபைப் பிரதிபலிக்கும் அவற்றின் மாடங்களையும் முகப்புத் தோற்றத்தையும் நோக்கும் போது அதன் மேற்பக்க கட்டிடத் தொகுதி அவர்களின் நிர்வாக மையமாகவும் கடற்கரை நோக்கிய அதன் கிழக்குப்பக்க கட்டிடத் தொகுதி கடற்பாதுகாப்பு அரணாகவும் இருந்ததெனக் கூறுவதே பொருத்தமாகும். அவற்றை உறுதிப்படுத்தும் வகையில் கட்டிடத்தின் கிழக்குப் பக்கத்தில் கண்காணிப்பு நிலையங்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன. இதன் நோக்கம் கடல் வழியாக வரக்கூடிய ஆபத்துக்களை கண்காணிப்பதாக இருக்கலாம். இரு மாடிகளைக் கொண்டதாக அமைக்கப்பட்ட இக் கட்டிடத் தொகுதி ஒல்ராந்தர் கால கட்டிடக் கலை மரபையும் அவர்களின் உயாந்த தொழில்நுட்பத்தையும் பார்ப்போரைப் பிரமிப்பூட்டும் வகையில் அமைந்து காணப்படுகிறது.
No comments:
Post a Comment