Wednesday, April 8, 2015

யாழ்ப்பாணப் பாரம்பரிய கலை வடிவங்கள்


   இலங்கையின் வடபகுதியில் காணப்படும் யாழ்ப்பாண குடாநாடானது தென்னாசியாவிலேயே மிக நீண்ட வரலாற்றுப் பாரம்பரியத்தையும் பண்பாட்டம்சத்தையும் தன்னகத்தே கொண்டு தனித்துவமானதாக காணப்படுகின்றது.
யாழ்ப்பாண குடாநாடானது பல்வேறு பட்ட மரபுரிமை அம்சங்களினை கொண்டு காணப்படுகின்றது. இவ் மரபுரிமை அம்சங்களில் ஒன்றாக விளங்குவது நாட்டார் இலக்கியங்களாகும்.

தாலாட்டு
யாழ்ப்பாணத்திலே தோற்றம் பெற்ற நாட்டார் இலக்கியங்களிலே சிறப்பு பெற்றதாக தாலாட்டு காணப்படுகின்றது. குழந்தை பிறந்து 31ஆம் நாள் குழந்தையின் மாமன் அக் குழந்தையை தொட்டிலில் இடும் போது பெரியதாய், சிறியதாய் முதலியவர்களினால் தாலாட்டு முதலில் பாடப்படும்.
“ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ
சீரார் பசுங் கிளியே தெவிட்டாத செந்தேனே
பேரார் குலக் கொழுந்தே பெருமானே ஆராரோ…….
…………………………………………………”



மருத்துவப் பாடல்
 குழந்தை பிறந்தவுடன் மருத்துவிச்சியினால் பாடல் பாடப்படும் வழக்கம் யாழ்ப்பாணத்திலே காணப்பட்டது. இப் பாடலிலிருந்து குழந்தை பிறந்தமையை அவரது குடும்பத்தினர் அறிந்து கொள்ள முடிகின்றது. அப் பாடல் பின்வருமாறு

"நெல்லுப் பொதியோடும் வந்தீரோ - தம்பி
நெல்லு மலைநாடும் கண்டடீரோ - தம்பி
உள்ளிப் பொதியோடும் வந்தீரோ - தம்பி
உள்ளி மலைநாடுங் கண்டீரோ - தம்பி
அரிசிப் பொதியோடும் வந்தீரோ – தம்பி
அரிசி மலைநாடுங் கண்டீரோ - தம்பி
வேந்தர்க்கு வேந்தராய் வந்தீரோ – தம்பி
வேந்தர் தம் மணிமுடியும் கண்டீரோ – தம்பி"
      என காணப்படுகின்றது.



கும்மி பாடல்
யாழ்ப்பாணத்து அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டுக் கூறுகளையும் வரலாற்றுச் செய்திகளையும் கும்மி பாடல்கள் தருகின்றன. இந்த வகையிலே இன்று எமக்கு கிடைத்துள்ள பண்னைப் பாலக்கும்மி ,உத்தியோகர்லக்ஷணக்கும்மி ஆகிய இரண்டும் அரசியல் விடயங்களைக் கூறுகின்றன. உத்தியோகர்லக்ஷணக்கும்மி போர்த்துக்கேயர் ஒல்லாந்தர் ஆங்கிலேயர் கால ஆட்சி முறைகளைத் தெளிவாக சுட்டுவதோடு பிரபல கோட்டு வழக்குகளையும் அக்கால பெரிய மனுஷர்களின் வாழ்க்கைச் சம்பவங்களையும் சுட்டிக்காட்டுகின்றது. உதாரணமாக

“பட்டமும் பெற்று ஒரு பாரியையுங் கொண்டு
பரிசுடன் முத்துக் கிட்டினரும் வந்தார்
இட்டமாய் யாவரும் போய் மரியாதையோ(டு)
இன்பு கொண்டாடினர் ஞானப் பெண்ணே”

உணவுப் பாடல்
யாழ்ப்பாணப் பிரதேசத்திலே மரவள்ளி ,இராசவள்ளி ,வத்தாளை போன்ற கிழங்கு வகைகளும் மாம்பழம் ,பலாப்பழம் ,வாழைப்பழம்,வெள்ளரிப்பழம், வத்தகப்பழம் ,பனம்பழம் போன்ற பழவகைகளும் சிறப்பாக காணப்படுகின்றன. யாழ்ப்பாணத்திற்கு தனிச்சிறப்பு உண்டு என்பதை பின்வரும் பாடல் எடுத்துக்காட்டுகின்றது.

“ நீதி பிழைப்பிக்கும் நேர்மை தவறுவிக்கும்
பாதிப் படிப்பில் பதவிதரும் - ஏதுக்கும்
ஓம்பட்டிசைவிக்கும் ஒன்றன்றோ யாழ்ப்பாண
மாம்பழத்துத் தீஞ்சுவையின் பண்பு”

ஒப்பாரிப் பாடல்
நாட்டார் இலக்கியங்களில் ஒப்பாரி முக்கியமானது. இவ் ஒப்பாரியானது ஒரு மனிதனின் இறப்பின் போது அவ் துயரத்தினை குறைப்பதற்காக பெண்கள் ஒன்றுகூடி பாடி அழுவார்கள்.

No comments:

Post a Comment