Friday, December 12, 2014

யாழ்ப்பாண நூதனசாலை

           

  ஒரு நாட்டினுடைய, பிரதேசத்தினுடைய, இனத்தினுடைய, மதத்தினுடைய, மொழியினுடைய வரலாற்றினை அறிந்து கொள்வதற்கு நூதனசாலைகள் பெரிதும் உதவிநிற்கின்றன.
இலங்கையில் பல்வேறு நூதனசாலைகள் காணப்படுகின்ற போதிலும் வடமாகாணத்தில் அமைக்கப்பட்ட நூதனசாலை மிகவும் முக்கியமானதாகும்.
         இலங்கையின் வட மாகாணத்திலே அப்பிரதேச முக்கயத்துவத்தினையும் பண்டையகால வரலாற்று பாரம்பரியத்தையும் எடுத்துக்கூறும் நோக்கில் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா ஆகிய இடங்களில் நூதனசாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் இலங்கையின் தலைபோல் விளங்கும் வடபகுதியான யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள நூதனசாலை தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். 
             
        யாழ்ப்பாண அருங்காட்சியகம் 1942ம் ஆண்டு கொழும்பு அருங்காட்சியகம் தேசிய அருங்காட்சியகச் சட்டத்திற்கமைய தேசிய அருங்காட்சியகமாக பிரகடணப்படுத்தப்பட்ட சில ஆண்டுகளிலே ஆரம்பிக்கப்பட்ட முதல் மூன்று அருங்காட்சியகங்களுள் (கண்டி, இரத்தினபுரி, யாழ்ப்பாணம்) ஒன்றாக திகழ்ந்தது. அவ் ஆரம்ப நூதனசாலையானது யாழ் நகர்ப்புறத்தை அண்மித்த 2ம் குறுக்குத்தெருவில் ஆங்கிலேயர் கால பாணியில் அமைந்த தனியார் கட்டடமொன்றிலேயே அமைக்கப்பட்டிருந்தது. தேசிய நூதனசாலைகள் திணைக்களத்தினால் அதுவரை பேணப்பட்டு வந்த யாழ் நூதனசாலையானது 1965 இல் இடம்பெற்ற மந்திரி சபைத் தீர்மானத்தின்படி இலங்கை தொல்லியல் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ஆரம்ப காலங்களில் யாழ் நூதனசாலையின் ஒரு பிரிவாக விலங்கியல் நூதனசாலையும் இயங்கியது. இதனை பொறுப்பேற்ற பின்னர் அவ்விலங்கியல் நூதனசாலையில் இருந்த பொருட்கள் கொழும்பு தேசிய நூதனசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டன. 

            இத்தகைய காலகட்டத்தில் வடமாகாணத்தில் அதிலும் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட ஒரேயொரு பிரதேச தொல்லியல் நூதனசாலையாக யாழ்ப்பாண நூதனசாலை விளங்கிய காரணத்தினால் யாழ் நூதனசாலையில் காட்சிப்படுத்தப்பட்ட பொருட்களின் எண்ணிக்கை அதிகரித்ததுடன், அவற்றை காட்சிப்படுத்துவதிலும் பல சிக்கல்கள் ஏற்படத் தொடங்கின. மேலும் நகரமயமாக்கல், அக்கால யுத்த சூழ்நிலை மற்றும் பாதுகாப்பின்மை என்பன காரணமாக நூதனசாலைக்கென சொந்தமானதாக ஒரு கட்டிடத்தை அமைக்கவேண்டிய தேவை ஏற்பட்டது. இதற்காக யாழ்ப்பாணத்திலே 19ம் நூற்றாண்டில் வாழ்ந்து சைவமும், தமிழும் வளர உழைத்தவருமான ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் எனும் பெரியாருக்கு சொந்தமான காணி அவரது உறவினர் மூலம் தொல்பொருட் திணைக்களத்திற்கு அன்பளிப்பாக 1975 ம் ஆண்டு வழங்கப்பட்டது. அதாவது இன்று நாவலர் வீதியும், நல்லூர் வைமன் வீதியும் இணையும் சந்திக்கு சமீபமாகவுள்ள காணியிலேயே இவ்நூதனசாலை அமைந்துள்ளது. 
       
     நாவலர் வீதியில் இன்று அமைந்துள்ள தொல்பொருட் காட்சிசாலையானது அக்கால கலாசார அமைச்சராக விளங்கிய கௌரவ எஸ். எஸ். குணதிலக அவர்களினால் 18.12.1972 அன்று ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் 150 ஆவது பிறந்தநாள் ஞாபகார்த்த தினத்தன்று அடிக்கல் நாட்டப்பட்டது. இவ் அடிக்கல் நாட்டு அங்குரார்ப்பண வைபவத்தில் அக்காலத் தபால் தந்தி அமைச்சரான கௌரவ செல்லையா குமாரசூர்ய அவர்களும் நல்லூர்த் தொகுதி தேசிய அரசுப் பேரவை உறுப்பினராக விளங்கிய திரு. சி. அருளம்பலம் அவர்களும் கலந்து கொண்டனர். பின்னர் அக்காலத் தொல்லியல் ஆணையாளராக விளங்கிய கலாநிதி நோலண்ட் டி சில்வா அவர்களின் மேற்பார்வையின் கீழ் 1978 ஆம் ஆண்டளவில் நூதனசாலையின் கட்டடப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. 1985ஆம் ஆண்டளவிலேயே பொதுமக்களின் பார்வைக்கெனத் திறந்து வைக்கப்பட்டது. அதாவது 1956 – 1984 ஆம் ஆண்டு வரை இரண்டாம் குறுக்கு தெருவில் இயங்கி வந்த நூதனசாலையானது 1985 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நாவலர் வீதியில் வரலாற்றுத் தொடக்க காலம்தொட்டு ஆங்கிலேயர் காலம் வரையிலான தொல்பொருட் சின்னங்களுடன் பண்டைய காலத்தை விபரிக்கும் மாதிரி சின்னங்களையும் மிக விசாலமான காட்சி கூடங்களையும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. 

    இங்குள்ள காட்சிப் பொருட்களாக கல்வெட்டுகள், கற்சிலைகள், கற்செதுக்கல் வேலைப்பாடுகள், மரஉபகரணங்கள், பித்தளை மற்றும் வெள்ளியினாலான பொருட்கள், மட்பாண்டங்கள், சுடுமண் உபகரணங்கள், ஆயுதங்கள், நாணயங்கள், ஓவியம் மற்றும் சங்கு, சிற்பி, யானைத்தந்தம் ஆகியவற்றால் செய்யப்பட்ட பொருட்கள், இரும்பு உலோக பொருட்கள், முற்காலத்தில் பயன்படுத்தப்பட்ட வீட்டு பாவனை பொருட்கள், மாதிரி வடிவங்கள் என்பவற்றோடு பிறநாட்டுச் சான்றுகள் இங்கு வைக்கப்பட்:டுள்ளன. இங்கு பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மத மக்களால் பயன்படுத்தப்பட்ட பொருட்களும் மதச்சின்னங்களும் காணப்படுகின்றன. 

         இந்நூதனசாலை இயங்கிய ஆரம்ப காலங்களில் இங்கு சிறிய நூலகமொன்றும் இயங்கியது. தற்போது அங்குள்ள நூல்கள் பாவனைக்கு உதவாத நிலையில் இருப்பதனால் நூலக பாவனை நிறுத்தப்பட்டுள்ளது. யாழ் நூதனசாலையானது 2ம் குறுக்குத் தெருவில் அமைக்கப்பட்ட காலத்திலிருந்து பின்னர் 1985 இலிருந்து நாவலர் வீதியில் அமைக்கப்பட்:டு தற்காலம் வரை திரு சி. கந்தையா (1973 – 1974), திரு ஆ.P. செல்வரட்ணம் (1974 – 1983), திரு N. கமலேந்திரன் (1983ஃ84 – 1994) திரு ஏ. சிவலிங்கம் (1994 – 2011), திரு வு. நாகேஸ்வரன் (2011 – 2014) ஆகியோரின் பொறுப்பில் இயங்கி வருகின்றது. 

        இலங்கையிலே தொல்பொருட் திணைக்களத்தின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருகின்ற நூ}தனசாலைகளுள் ஒன்றாக திகழும் யாழ் நூதனசாலையானது யுத்த காலத்தில் ஒரு சில இழப்புக்களை சந்திக்க நேரிட்டாலும் இன்று ஓரளவு வசதிகளுடன் பண்டைய வரலாற்றை எமது எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துகூறும் நோக்கில் மிகச் சிறப்பாக இயங்கி வருவதனைக் குறிப்பிடலாம். 






No comments:

Post a Comment